search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருட்டு கும்பல் கைது"

    மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளான கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், அருணாசலேஸ்வரர் கோவில் என பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடைபெற்று உள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன், டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சகரவர்த்தி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் தனி குழு அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், சிவசங்கரன், மகாலிங்கம், பஞ்சமூர்த்தி, புருசோத்தமன் மற்றும் போலீசார் தனித்தனியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் செல்லும் வழியில் உள்ள ரிங் ரோட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மோட்டார் சைக்கிளில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் திருவண்ணாமலை தேனிமலையை சேர்ந்த ஜிட்டி செல்வராஜ் (வயது 27) என்பதும், மற்றவர்களில் 2 பேருக்கு 17 வயது, ஒருவருக்கு 14 வயது என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் திருவண்ணாமலை, சந்தவாசல், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 22 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும், அதற்கு அவர்கள் கள்ள சாவி மட்டுமே பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    ×